காதலின் நிறம் கற்பனை..!
கனவு எனும் பெரும் உலகில்
நான் கண்ட முதல் நாவல்
அவள் முகம் எனும்
வண்ணக் கதிர்,
வாய்விட்டு வாசிக்க
வாய்ப்பை தேடி நித்தமும்
மறைந்தே நின்றேன்
அவள் பாதியில் விட்டுச்சென்ற
வெள்ளை புள்ளிகளின் ஓரத்தில்..!
எத்தனை அதிசயம்
வீட்டு வாசலில் அவள்
கொட்டிவிட்டுச் சென்ற சுண்ணாம்பிலும்
சித்திரமாய் காதல் பேசுதே..!
ஹோ... இது தான்
யாருக்கும் கிடைக்காத
நாவிற்கினிய அவ்வையின் நெல்லியோ..!
என்ன சொல்வது
என்னவளின் புன்னகை
காட்டும் ஓவியத்தின் வர்ணங்களை..!
நான் மட்டுமே கண்டேன்
அவளுடனான தனிமையின் பரிசத்தில்
வண்ணங்கள் நிறைந்த அவளிடம் - நான்
கண்டது நிறத்தை அல்ல
பசுமை மாறா குணத்தின் இயல்புகளை..!
ஆமாம்,
உலகில் வர்ணங்களே அதிகம்
கண்ணுக்கு விருந்தாகின்றன,
ஆனால் எனக்கு மட்டும்
என்னவளே கவித்துவம் நிறைந்த
மோனலிசாவின் ஓவியமாகிறாளே..!
இதற்கு இயற்கையும் பெரும் சாட்சி
சூரியனும் புறஊதா கதிர்களை
அகம் கொள்கிறது,
சந்திரனும் இருளுக்குள் ஓடி மறைகிறது,
வானவில்லும் ஏழு வழி சாலையாகிறது
வர்ணங்களுக்கே வண்ணம் சேர்த்தவள்
வீதியில் பவனி வரும் அழகில்..!
என்ன செய்வது
வண்ணங்களுக்கு நிறமானவள்,
என் எண்ணங்களுக்கு உரமானவள்..!
ஒரு கணமேனும்
கண் சிமிட்டிக் கொள்கிறேன்
பாவை அவள் மத்தியில்
புதைந்தே தான் கிடக்கின்றன,
பார்வைகள் அனைத்தும்..!
கருத்துகள்